கிராம மக்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு

தட்டார்மடம் அருகே வணிக வளாகம் அமைக்காமல் பயணியர் நிழற்குடை அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-09 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே வணிக வளாகம் அமைக்காமல் பயணியர் நிழற்குடை அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வணிக வளாகம் இடிப்பு

சாத்தான்குளம் யூனியன் பள்ளக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணிநகரில் ஏற்கனவே இருந்த வணிக வளாகம் இடிக்கப்பட்டு புதியவணிக வளாக கட்டிடம் கட்டப்பட இருந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாசம் தொகுதி அந்த இடத்தில் பயணியர் நிழற்குடை மட்டும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அறிந்த பஞ்சாயத்து தலைவர் சித்ராங்கன் தலைமையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்ய முயன்றனர். இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், வணிக வளாகத் துடன் கூடிய பயணியர் நிழற்குடை அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

கிராம மக்கள் மறியலுக்கு முயற்சி

இதை தொடர்ந்து பஞ்சாயத்து சார்பில், ரூ.5 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கவும், ரூ.16 லட்சத்தில் வணிக வளாகத்துடன் கூடிய கட்டிடம் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்க இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் மணிநகரில் பயணியர் நிழற்குடை மட்டும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை அறிந்த பள்ளக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் தலைமையில் கிராம மக்கள், பயணியர் நிழற்குடை மட்டும் அமைக்காமல் பஞ்சாயத்து தீர்மானத்தின்படி வணிக வளாகத்தோடு சேர்த்து அமைக்க வேண்டும். இல்லையேனில் பணிகளை தொடங்க விடமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்துக்கு முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள் தலைமையில் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பவுலோஸ், தாசில்தார் ரதிகலா, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ராணி, சுரேஸ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து இணை இயக்குனர் உலக நாதன் ஆகியோர் அங்கு சென்றனர். பின்னர் பள்ளக்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் சித்திராங்கன் மற்றும் கிராம மக்களின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வணிக வளாகத்துடன் கூடிய பயணியர் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா துணை தலைவர் செல்வராஜ், மாவட்ட பிரசார பிரிவு தலைவர் மகேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், மாநில இந்து முன்னணி நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்