புதுவண்ணாரப்பேட்டையில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு
புதுவண்ணாரப்பேட்டையில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
சென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ெரயில் நிலையம் அருகே லட்சுமி கோவில் பகுதியில் திடீரென சாலையில் சுமார் 7 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு பள்ளத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் வைத்து அடைத்தனர். பின்னர் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.
மேலும் மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை உடனடியாக சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். கழிவுநீர் செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாலையில் பள்ளம் ஏற்பட்ட நேரத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த வாகனமும் அந்த வழியாக செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.