லாரியில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு

கடலூர் தென்பெண்ணையாற்று பாலத்தில் சென்றபோது லாரியில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-05-21 00:15 IST

ரெட்டிச்சாவடி, 

கடலூரில் இருந்து நேற்று மதியம் செப்டிக் டேங்க் லாரி ஒன்று பெரிய கங்கணாங்குப்பம் நோக்கி சென்றது. அந்த லாரியை கடலூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஓட்டினார். கடலூர் தென்பெண்ணையாற்று பாலத்தில் சென்ற போது, லாரியின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனால் டிரைவர் நடுரோட்டிலேயே லாரியை நிறுத்தினார்.

இதற்கிடையே சிறிது நேரத்தில் லாரியில் இருந்து அதிகளவு புகை வெளியேறியதால் சாலை தெரியாத அளவிற்கு அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், ஏதோ தீ விபத்து ஏற்பட்டதாக கருதி அலறியடித்துக் கொண்டு திரும்பினர். மேலும் லாரி நடுரோட்டிலேயே நின்றதால் புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வந்த வாகனங்களும், கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் லாரி டிரைவர், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உதவியுடன் லாரியில் தண்ணீரை ஊற்றியதும், புகை வெளியேறியது குறைய தொடங்கியது. அப்போது ரேடியேட்டரில் இருந்து புகை வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் லாரியை மீண்டும் இயக்கி, ஆல்பேட்டையில் சாலையோரம் நிறுத்தினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்