தியாகதுருகம் அருகே சிலிண்டர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
தியாகதுருகம் அருகே சிலிண்டர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே வடதொரசலூர் ரீட்டாநகர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் மனைவி மரியம்மாள் (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஓட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கியாஸ் நாற்றம் வீசுவதை உணர்ந்த மரியம்மாள் எழுந்து பார்த்தபோது, கியாஸ் சிலிண்டர் தீப்பற்றி எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மரியம்மாள் கூச்சலிட்டார். இதைகேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்ததுடன், இதுபற்றி தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிலிண்டரில் ஏற்பட்ட தீயை அணைத்ததோடு, வீட்டில் இருந்த மரியம்மாளை பாதுகாப்பாக மீட்டனர். கியாஸ் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.