தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்

ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வடமதுரை ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-06-12 16:29 GMT

வடமதுரை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், அதன் தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் தனலட்சுமி கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் சிமெண்டு கிட்டங்கி கணினி உதவியாளருக்கு ஊதியம் வழங்குதல், சிக்கன் குனியா நோய் பரப்பும் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்ட களப்பணியாளர்களுக்கு ஊதியம் 6½ லட்சம் வழங்குதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சி பகுதிகளில் கூடுதலாக மின்மோட்டார்களை பொருத்தி தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். சுக்காம்பட்டி ஊராட்சியில் 100 நாள் பணியாளர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்வார்கோட்டையில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கவுன்சிலர்கள் மோகன், சுப்பிரமணி, முனியம்மாள் ஆகியோர் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசினர்.

மேலும் இந்த ஆண்டில் வடமதுரை ஒன்றியத்துக்குட்பட்ட 15 ஊராட்சிகளுக்கு 1500 புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. எனவே புதிய இணைப்பு தேவைப்படுபவர்களின் பட்டியலை அனைத்து ஊராட்சிகள் மூலம் வழங்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ரவீந்திரன் வரவேற்றார். முடிவில் வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஏழுமலை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்