"கோவில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக் கூடாது" - மதுரை ஐகோர்ட்டு
கோவில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிறம் அடிப்படையில் பாகுபாடு கூடாது என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை,
புதுக்கோட்டை, அறந்தாங்கி தாலுகாவில் அய்யனார், கருப்பர் கோவில் கும்பாபிசேகம் நடத்துவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினரை இணைத்து கும்பாபிசேகம் நடத்த தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யகோரி மதிமுருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, '' கோவில் அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டு தலமாகும். கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு. கோவில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிறம் அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது. '' என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் என அனைவரையும் இணைத்து கும்பாபிசேகம் நடத்த வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என கூறி வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.