பெரம்பலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் போதிய தகவல்கள் இல்லை

பெரம்பலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் போதிய தகவல்கள் இடம்பெற செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2023-07-06 17:57 GMT

போதிய தகவல்கள் இல்லை

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தனித்தனி இணையதள பக்கங்கள் உள்ளன. இந்த பக்கங்களில் அந்த மாவட்டத்தின் முகப்பு, மாவட்டம் பற்றி, துறைகள், விவர தொகுப்பு, சுற்றுலா, ஆவணங்கள், அறிவிப்பு, மக்கள் சேவைகள் உள்ளிட்ட மேலும் பல தகவல்களும், அனைத்து அரசு துறைகள் மற்றும் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இருக்கும். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கு தனியாக அதிகாரப்பூர்வமான https://perambalur.nic.in/ என்ற இணையதள பக்கம் உள்ளது. ஆனால் இந்த பக்கத்தில் போதுமான தகவல்கள் இல்லை. குறிப்பாக, நீர்நிலைகள், சுற்றுலா தலங்கள், அனைத்து அரசு துறைகள், வேளாண் சந்தைகள், நூலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் பற்றிய போதுமான மற்றும் முக்கிய தகவல்கள் இல்லை. இதனால், பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் போதிய தகவல் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்ட இணையதள பக்கத்தில் போதிய தகவல்களை மேம்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் பின்வருமாறு:-

புவிசார் குறியீடு பெற்ற அரும்பாவூர் மரச்சிற்பம்

பெரம்பலூர் தாலுகா, அருமடல் கிராமத்தை சேர்ந்த தினகரன்:- பெரம்பலூர் மாவட்ட இணையதள பக்கத்தில் மாவட்டத்தின் சிறப்புகள் போதிய அளவு இடம்பெறவில்லை. புவிசார் குறியீடு பெற்ற அரும்பாவூர் மரச்சிற்பம் குறித்தும் தகவல்கள் இல்லை. பெரம்பலூரில் உள்ள அம்மோனைட்ஸ் அருங்காட்சியகம், சாத்தனூர் கல்மர பூங்காவில் உள்ள கற்றல் கல்வி மையம் குறித்த தகவல்களும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் மற்றும் காரை தொல்பொருள் எச்சங்கள் உள்ளிட்டவை பற்றிய தகவல்களும் இணையதள பக்கத்தில் இல்லை. அவற்றை எல்லாம் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகளை இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நகராட்சி விவரம்

அரசு துறைகளில் இந்து சமய அறநிலையத்துறையின் கோவில்கள், அவற்றின் விவரங்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள் நடை திறக்கும் விவரங்கள், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும். மாவட்டத்தில் உள்ள புத்தர் சிலைகள், மசூதிகள் பற்றிய தகவல்களும் சேர்க்கப்பட வேண்டும். மாவட்டத்திற்கு வேளாண் துறை முக்கியம். ஆனால், ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடங்கள் பற்றிய விவரங்கள், உழவர் சந்தை ஆகியவற்றின் இருப்பிடம் உள்ளிட்ட போதிய தகவல்கள் இல்லை. மேலும், கால்நடை மருந்தகங்கள் மற்றும் அவற்றின் இருப்பிடங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பெரம்பலூர் நகராட்சி குறித்து முழு விவரங்கள் இடம்பெற செய்ய வேண்டும்.

சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு...

குன்னத்தை சேர்ந்த அசோக்:- தற்போது நாம் நவீன உலகத்தில் உள்ளோம். நமக்கு ஏதேனும் தகவல் தெரியவில்லை என்றால் இணையதள முகவரியை நாடுகிறோம். பெரம்பலூர் மாவட்ட இணையதள பக்கத்தில் இடம்பெற்றுள்ள அரசு துறைகளின் தொலைபேசி எண்களில் பெரும்பாலானவற்றை தொடர்பு கொண்டால் யாரும் எடுப்பதில்லை. அதற்கு பதிலாக தற்போது உள்ள செல்போன் எண்களை இடம்பெற செய்ய வேண்டும். அரசு துறைகளின் இணையதள முகவரிகள் கட்டாயம் இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து உடனுக்குடன் இணையதள பக்கத்தில் இடம்பெற வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு வழித்தட வரைபடத்துடன் இடம்பெற்றால் சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு துறைகள் எந்தந்த தளத்தில் உள்ளது என்பன இடம்பெற வேண்டும். புவிசார் குறியீடு பெற்ற அரும்பாவூர் மரச்சிற்பம், மகளிர் சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் விவரம் மாவட்ட இணையதள பக்கத்தில் இடம்பெற செய்ய வேண்டும்.

மாவட்டம் சார்ந்த அரசாணைகள்

வேப்பந்தட்டை தாலுகா, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மதியழகன்:- அருகே உள்ள மாவட்டங்களான அரியலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் இணையதள பக்கங்களை பார்க்கும்போது, பெரம்பலூர் மாவட்ட இணையதள பக்கத்தில் போதிய தகவல்கள் இல்லை. கலெக்டர் மாவட்ட முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அவை சமூக வலைத்தளமான முகநூல் (பேஸ்புக்), டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால் மாவட்ட இணையதள பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. தமிழக அரசு வெளியிடும் பெரம்பலூர் மாவட்டம் தொடர்பான அரசாணைகள் இணையதள பக்கத்தில் இடம்பெற வேண்டும். தகவல் செய்திகளை முன்கூட்டியே இடம்பெற செய்ய வேண்டும்.

விரல் விட்டு எண்ணக்கூடிய...

ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டியை சேர்ந்த விக்னேஷ்:- பெரம்பலூர் மாவட்ட இணையதள பக்கத்தில் 8 துறைகளின் விவரங்கள் தான் இடம் பெற்றிருக்கிறது. இவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே தகவல்கள் இருப்பது வருத்தமளிக்கிறது. இதனால் அரசு துறைகளின் விவரங்களை பொதுமக்களால் இணையதள பக்கம் மூலம் அறிய முடியவில்லை. அனைத்து அரசு துறைகளின் விவரங்களும் கண்டிப்பாக இடம்பெற செய்ய வேண்டும். இணையதள பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் பழையதாக உள்ளது. புதியதாக மாற்றப்பட்ட தகவல்கள் இடம்பெறவில்லை. பெரம்பலூர் மாவட்டம் சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம், சிறுதானிய பயிர்கள் ஆகியவை உற்பத்தியில் தமிழகத்திலேயே சிறப்பிடம் பெற்று திகழ்கிறது. ஆனால் அது சம்பந்தமான விவரங்கள் இல்லை. பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு அரணாக விளங்கும் பச்சைமலை, அதில் இருந்து உருவாகும் அருவிகள், ஆறுகள் விவரங்கள் இல்லை. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவக்குடி நீர்த்தேக்கம், கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம், மருதையாறு உள்ளிட்ட ஆறுகளின் விவரங்கள் பற்றி இடம்பெறவில்லை. ஊரக வளர்ச்சித்துறையின் சிறுபாசன ஏரிகள், குளங்கள் குறித்த தகவல்களும், நூலகங்கள் பற்றிய விவரங்களும் இல்லை. பெரம்பலூர் மாவட்ட இணையதள பக்கத்தில் போதிய தகவல்கள் இடம்பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்