கோத்தகிரி வட்டப்பாறை கிராமத்தில் சாலை வசதி இல்லை: தொட்டில் கட்டி நோயாளிகளை தூக்கிச்செல்லும் அவலம்-உரிய நடவடிக்ைக எடுப்பது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோத்தகிரி வட்டப்பாறை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி நோயாளிகளை தூக்கிச்செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.;

Update: 2023-04-12 18:45 GMT

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதிகள், அழகிய பள்ளத்தாக்குகள் உள்ளன. இங்கு வனப்பகுதியை யொட்டி மக்கள் வசித்து வரும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் தற்போதும் எட்டக்கனியாகவே உள்ளது. அவர்கள் வனவிலங்குகள் தாக்கிவடுமோ என்ற அச்சத்தில் கூலி வேலைக்கு சென்று வருகிறார்கள். அவ்வாறு சென்று வரும் போது வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

கோத்தகிரி அருகே உள்ள நடுஹட்டியில் இருந்து சுமாா 3 கிலோமீட்டர் தூரத்தில் வட்டப்பாறை கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கிராம மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்கு இன்று வரை சாலை வசதி இல்லாமல் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் நிலை அந்தோ பரிதாபமாக உள்ளது.

காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக உள்ள இந்த கிராமத்திற்கு உரிய சாலை வசதி இல்லை. பிரதான சாலையில் வட்டப்பாறை முடக்கில் இருந்து தனியார் தேயிலைத் தோட்டம் வழியாகத்தான் இந்த கிராம மக்கள் தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர்.

ஒற்றையடிப்பாதை

பள்ளி மாணவ- மாணவிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் தினமும் தேயிலைத் தோட்டங்கள் வழியாக செல்லும் ஒற்றையடிப் பாதையையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து நடுஹட்டி ஊராட்சி சார்பில் இந்த கிராமத்திற்கு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கென 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் சாலை அமைக்க தேவையான கட்டுமானப் பொருட்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களில் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை தொட்டில் கட்டி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் நிலை நிலவி வருகிறது. இதேபோல் வட்டப்பாறை கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் தான் ஆஸ்பத்திரி மற்றும் பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு செல்ல மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஒற்றையடிப்பாதையை பயன்படுத்தி வருகிறார்கள்.

அடிப்படை வசதிகள் இல்லை

அந்தப்பாதையும் கரடு, முரடாக உள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே விரைந்து தங்கள் கிராமத்திற்கு சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இதேபோல் வட்டப்பாறை கிராமத்தில் சாக்கடைகால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகவும் வேதனையில் தவித்து வருகிறார்கள். மழைநீர் வடிகால் இல்லாததால் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதனால் வட்டப்பாறை கிராமத்திற்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

தொட்டில் கட்டி சுமந்து செல்கிறோம்

மணிகண்டன் (ஆசிரியர்):- நேற்று காலை எனது தாயார் விஜயாவுக்கு (வயது 55) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சாலை வசதி இல்லாத எங்கள் கிராமத்திற்கு 108 ஆம்புலன்ஸ், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் கூட வர முடியாது. இதனால் இளைஞர்கள் உதவியுடன் தொட்டில் கட்டி சுமந்து சென்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றோம். எனவே ஒரு ஆட்டோ வந்து செல்லும் அளவிற்காவது சாலையை அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவ-மாணவிகள் அச்சம்

தினேஷ் :- எங்கள் கிராமப் பகுதியில் காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ளது. ஆனால் உரிய சாலை வசதி இல்லாததால் பணிக்கு செல்லும் தொழிலாளர்களும், மாணவ, மாணவிகளும் தினமும் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேயிலைத் தோட்டம் வழியாக, வன விலங்குகள் தாக்கி விடுமோ என்கிற அச்சத்துடன் கரடு -முரடான நடைபாதை வழியாக நடந்து சென்று வருகிறோம். சில நேரங்களில் நோயாளிகளை தொட்டில் கட்டி சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் எங்களது கிராமத்திற்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் தார்சாலை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும்.

கழிவுநீர் கால்வாய் வசதியும் இல்லை

நாகராஜ் (டிரைவர்):- சாலை வசதியில்லாத காரணத்தால் கடந்த 5 வருடங்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்ட எனது மாமனார் கண்ணன் என்பவரை தொட்டில் கட்டி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தற்போதுள்ள நடுஹட்டி ஊராட்சி மூலம் எங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆனால் கழிவு நீர் கால்வாய் வசதி, நடைபாதை வசதி மற்றும் சாலை வசதி செய்து தரப்படவில்லை. எனவே இந்த அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

சாலை அமைக்க வேண்டும்

சிவா :- எங்களது கிராமத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள கட்டுமானப் பொருட்களை கொண்டு வர உரிய சாலை வசதி இல்லாததால், பொருட்களை சுமந்து செல்ல வேண்டி உள்ளது. இதற்காக பொருட்களை கொண்டு செல்லும் கூலி மிகவும் அதிகமாக இருப்பதால் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் யாரும் ஆர்வம் காட்டுவது இல்லை. மேலும் வீடுகள் கட்டவோ, பராமரிப்பு பணிகள் செய்யவோ பொருட்களை கொண்டு செல்வோ மிகவும் சிரமமாக உள்ளது. அதனால் வட்டப்பாறை கிராமத்திற்கு விரைந்து சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டால் கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


விரைவில் பணிகள் தொடங்கும்

நடுஹட்டி ஊராட்சி அதிகாரிகள் மற்றும் தலைவர் அரக்கம்பை கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:- ஊராட்சிக்குட்பட்ட வட்டப்பாறை கிராமத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்தது. அப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் மற்றும் தெரு விளக்கு வசதிகள் தற்போது முழுமையாக செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதி கிடைத்தவுடன் நடைபாதை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி செய்துக் கொடுக்கப்படும். அந்த பகுதி மக்களின் சுமார் 40 ஆண்டு கோரிக்கையான சாலை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பொருட்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் இந்த கிராமத்திற்கு சாலை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்