தமிழகத்தில் கனிமவள கொள்ளையை தடுப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை; பிரேமலதா குற்றச்சாட்டு
தமிழகத்தில் கனிமவள கொள்ளையை தடுப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் கனிமவள கொள்ளையை தடுப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா குற்றம்சாட்டினார்.
கனிமவள கொள்ளை
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்ந் நேற்று காலை தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கனிமவள கொள்ளை தடுக்கப்பட வேண்டும். நாள்தோறும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுகிறது. சமீபத்தில் மணல் கடத்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் கடத்தல் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் போலீஸ் துறை அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது.
தமிழகத்தில் வருமானவரித்துறை சோதனை செய்யும் அதிகாரிகளுக்கு, நியாயத்தை பேசுபவர்களுக்கு, கனிமவள கொள்ளையை தடுப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் எல்லாம் கண் துடைப்பு நாடகம். எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது?, எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தி.மு.க அரசின் 2 ஆண்டு கால சாதனை என்றால் 2 ஆண்டுகள் இருண்ட ஆட்சிதான்.
கேள்விக்குறி
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் உரிமம் ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய தலைகுனிவு ஆகும். மருத்துவக்கல்லூரி கட்டிடம், பள்ளிக்கட்டிடங்கள் ஆகியவை முறையாக கட்டப்படுவதில்லை. ஆனால் ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள், எலைட் பார், தானியங்கி மதுவிற்பனை ஆகியவை மட்டும் சிறப்பாக இயங்கி வருகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு வாழ்த்துகள். இந்திய வரலாற்றில் இது ஒரு மிக முக்கியமான நாள். ஒரு நல்ல ஒரு விஷயம் நடந்துள்ளது. அதேநேரத்தில் ஜனாதிபதியை ஏன் அழைக்கவில்லை? என்று பா.ஜனதா பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர், சமீபத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை புதுக்கோட்டை சூசைபாண்டியபுரத்தில் உள்ள வீட்டுக்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.