"அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை" - செல்லூர் ராஜு

அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.;

Update: 2023-09-21 08:02 GMT

மதுரை,

மதுரை மாவட்ட பாஜக துணை தலைவர் ஜெயவேல் உள்ளிட்ட 100 பேர் மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தனர்.

அதன்பின்னர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பாஜகவுடன் எந்த பிணக்கும் இல்லை. அண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சுக்குத்தான் அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பாஜக - அதிமுக இடையே பிரச்சினை என்று யாரும் கூறவில்லை. மோடிதான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதை நாங்கள் சொல்கிறோம். மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி எங்களை மதிக்கிறார்கள்; அதுபோதும். அண்ணா குறித்து அண்ணாமலை சொன்ன விதம்தான் தவறு என கூறினோம்.

மானத்தை இழந்து, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிசாமி பாஜக காலில் விழமாட்டார். எங்கள் கொள்கை அண்ணாயிசம். பாஜகவை அண்ணாமலை வளர்ப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியாவுக்கு பிரதமர் மோடி என்றால், தமிழ்நாட்டுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்.

"அதிமுகவின் அவைத்தலைவராக ஒரு இஸ்லாமியரை எடப்பாடி பழனிசாமி அமர வைத்துள்ளார். அதேபோல, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுகிற உதயநிதி ஸ்டாலின் திமுகவின் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை வர விடுவாரா?". இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்