வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்

வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டையில் வேலைசெய்யும் தொழிலாளர்களிடம் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

Update: 2023-03-16 10:31 GMT

கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று நாள் முழுவதும் நேரில் ஆய்வு செய்தார். முதல் கட்டமாக ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தூர் நத்தம் கிராமத்தில் அரசு பள்ளி கட்டிட பணிகளை ஆய்வு செய்தார். பின்பு அங்கு உள்ள அங்கன்வாடிக்கு சென்று அடிப்படை வசதி உள்ளதா? சுகாதாரமான முறையில் சமையல் செய்யப்படுகிறதா? என பாத்திரங்களை திறந்து பார்த்து ஆய்வு செய்தார். இதன் பின்னர் அங்கிருந்த துவக்கப்பள்ளி சத்துணவு மையத்திற்கு சென்று சமையலுக்கு வைத்து உள்ள முட்டைகளின் எண்ணிக்கை பதிவேடு சரியாக உள்ளதா? என கணக்கெடுத்தார். ஆனால் அங்கு முட்டை இருப்பிற்கான பதிவேடு முறையாக இல்லாததால் சத்துணவு மைய பெண் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க அவர் உத்திரவிட்டார்.

வடமாநில தொழிலாளர்களுடன்

இதைதொடர்ந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை செய்து வரும் பீகார், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலம் மற்றும் பிற மாநில ஆண், பெண் தொழிலாளர்களிடம் நேற்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:-

பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு சில வீடியோ வதந்திகள் எல்லாம் வந்தது. அவை உண்மை அல்ல. அதற்கு தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். அதில் எல்லா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் தமிழகத்தில் மிகச்சிறப்பாக வேலை செய்து வருகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்கள்.

எந்த பிரச்சினையும் இல்லை

இந்தியாவில் தமிழ்நாடு தொழில் வளம் மிக்க மாநிலம் ஆகும். அதிலும் திருவள்ளூர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ள தொழில்வளம் நிறைந்த பகுதி. இங்கு வெவ்வேறு வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 லட்சத்து 50 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இங்கு அவர்களுக்கு எந்த ஒரு சின்ன பிரச்சினையும் இல்லை. ஹோலி பண்டிகைக்காக பல்வேறு அண்டை மாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் தற்போது பண்டிகை முடித்து மகிழ்ச்சியாக தமிழ்நாடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இங்கு முழுக்க முழுக்க எந்த விதமான பிரச்சினையும் இல்லை. வருங்காலத்தில் கூட இனி எப்போதும் புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு எந்த வித பிரச்சனையும் வராது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் எல்லா நடவடிக்கைகளும் எடுத்து உள்ளோம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்