பிரிவின அரசியலை செய்பவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை

பிரிவின அரசியலை செய்பவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறினார்.

Update: 2022-10-11 16:35 GMT

பிரிவின அரசியலை செய்பவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறினார்.

மனித சங்கிலி போராட்டம்

திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் இடதுசாரிகள் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைக்கும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது.

இதில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்து கோஷங்கள் எழுப்பினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதத்தின் அடிப்படையில் வெறுப்புணர்ச்சியை வளர்க்கும் பிரிவினைவாதிகளுக்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்ற வகையில் இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் நாட்டில் மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவு உணர்வுகளை வளர்க்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் அடையாளம்.

இந்தியாவில் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே உணவு, ஒரே மொழி என்ற பிரிவின அரசியலை செய்பவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொண்டு வர வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

மொழிப்போர் வெடிக்கும்

உலகம் முழுவதும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் போது அதற்கு எதிர்மறையாக இந்தியாவில் ஆங்கிலத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானாவர்கள் அல்ல. இந்தி, சமஸ்கிருதம் படித்தவர்கள் தான் நாட்டில் முன்னேற முடியும் என்று புதிய கல்வி கொள்கை மூலம் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

இந்தி திணிப்பில் இதே அணுகு முறையை மத்திய அரசு தொடர்ந்தால் 1965-ல் நடந்த மொழிப்போரை விட வீரியமான மொழிப்போர் வெடிக்கும்.

தமிழக கவர்னர் அவரது கடமைகளில் செயல்படாமல் உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டு வரும் தீர்மானங்களுக்கு முழு வடிவம் கொடுப்பது போன்று கவர்னரின் செயல்பாடு இருக்க வேண்டும்.

சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 16 மசோதாக்கள் இன்றைக்கு நிறைவேறாமல் இருப்பதற்கு முழு காரணம் அவர் தான்.

திருவள்ளுவருக்கு காவி வேடம்

திருவள்ளுவருக்கு காவி வேடம் அணிவித்து ஒரு மதத்திற்குள் சுருக்க நினைக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் கவர்னர் போன்ற ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள் மதத்தால் நாட்டை பிரிக்கின்ற முயற்சியில் இறங்கி உள்ளனர்.

கவர்னர் மத ரீதியான கருத்துகளை சொல்வது தவறு. மேலும் திராவிடத்திற்கும் ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அதுவும் முற்றிலும் தவறானது.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது ம.தி.மு.க. மாவட்ட செயலாளார் சீனி.கார்த்திகேயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அம்பேத்வளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் தங்கராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்