'தூத்துக்குடியில் டெங்கு பாதிப்பு இல்லை'
‘தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இதுவரை டெங்கு பாதிப்பு இல்லை’ என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.
தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, துணை ஆணையர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி கவுன்சிலர்கள் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், மாநகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனை விரைந்து சரி செய்ய வேண்டும். 14-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் இருந்தது. தற்போது அனைத்து பகுதிக்கும் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மாநகராட்சி பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஏலத்தில், ஏற்கனவே கடைகள் வைத்து இருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வீரநாயக்கன்தட்டு பகுதியில் சாலை அமைக்க வேண்டும். 7-வது வார்டில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் என்று கூறினர்.
ஒத்துழைப்பு
இதற்கு பதில் அளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, மாதம் தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் சாலை பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சாலைகளில் மணல் தேங்குவது பெரும் பிரச்சினையாக உள்ளது. பொதுவாக சாலை அமைக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் வீடுகளின் முன்பு தண்ணீர் தேங்குமோ என்று மணல் நிரப்பி உயர்த்தி விடுகின்றனர். இதனால் சாலைகளில் மணல் தேங்குகிறது. இதனை தடுக்க பொதுமக்கள், கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கட்டிட இடிபாடுகளை ரோட்டில் கொட்டி வைக்காமல், அதற்கென ஒதுக்கப்பட்டு பள்ளமான இடங்களில் கொட்ட வேண்டும். மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலைபணிகள் அனைத்தும் இந்த மாதம் 30-ந் தேதிக்குள் முடிக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் பணிகள் முடிக்கப்படும்.
டெங்கு இல்லை
மாநகர பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் வணிகர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 10 நகர்நல மையங்கள், 7 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு தினமும் 60 பேருக்கு காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். தொடர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மாநகராட்சி பகுதியில் இதுவரை யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை.
அண்ணா பஸ் நிலையத்தில் 120 கடைகள் உள்ளன. இங்கு ஏற்கனவே கடை வைத்து இருந்தவர்கள், மாநகராட்சிக்கு எந்த பாக்கியும் வைக்காதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் வழங்கப்படுகிறது. உப்பாற்று ஓடை ரூ.52 கோடி செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது. அந்த மணலை கொண்டு ஓடையின் கரை பலப்படுத்தப்படுகிறது. அந்த பணி முடிந்த பிறகு வீரநாயக்கன்தட்டு ரோடு விரிவாக்கம் செய்து அமைக்கப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.