அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சேர்க்க வாய்ப்பே இல்லை -ஜெயக்குமார் பேட்டி

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சேர்க்க வாய்ப்பே இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதியாக பதில் அளித்தார்.

Update: 2022-11-27 23:16 GMT

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள் டிசம்பர் 5-ந் தேதி வருகிறது. அன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அதன் பின்னர் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இதற்கு உரிய அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் வழங்கும்படி மனு கொடுத்துள்ளோம். உரிய பாதுகாப்பும், அனுமதியும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரி உயிரிழப்புகள்

அண்மை காலமாக அரசு ஆஸ்பத்திரிகளில் கவனக்குறைவான சிகிச்சையால் உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கிறது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அதிக மயக்க மருந்து கொடுத்ததன் காரணமாக குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இதுபோல குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் குழந்தை ஒன்று இறந்துள்ளது. பிரியா என்ற மாணவி இறந்தது அனைவருக்கும் தெரியும்.

ஆட்சியாளர்கள் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சி என்ற முறையில் இதை எடுத்து சொல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாய்ப்பே இல்லை

ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் போன்றோர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக, பேச்சு அடிபடுகிறதே, என்ற நிருபர்களின் கேள்விக்கு, 'இதற்கு பதில் அளித்து, அளித்து புளித்து போய் விட்டது. அது முடிந்து போன கதை. அது தொடரும் கதை அல்ல. அதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமியே, கூறி விட்டார்' என்று ஜெயக்குமார் உறுதியாக பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்