ஏழை, எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு எந்த அறிவிப்பும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இல்லை - கே.எஸ்.அழகிரி
ஏமாற்றம் மிகுந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்ததற்கான உரிய பாடம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் புகட்டப்படும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசின் 10 ஆண்டு ஆட்சியில் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அரசு நிர்வாக செலவுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் இருக்குமேயொழிய பெரிய திட்டங்களை அறிவிப்பது மரபாக இருந்ததில்லை. ஆனால், அந்த மரபுகளை மீறுகிற வகையில் மக்களவை தேர்தலை மனதில் கொண்டு சில கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2014-ல் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத மத்திய பா.ஜ.க. அரசு சாதனைகள் என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று சொன்னார்கள். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையின்படி 20-24 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களில் 44.5 சதவிகிதம் பேர் கடந்த நிதியாண்டில் அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கிறார்கள். அதேபோல, 25 முதல் 29 வயதானவர்களில் 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு 14.33 சதவிகிதத்தினர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இதன்மூலம் 10 ஆண்டுகளில் 20 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய மத்திய பா.ஜ.க. அரசு அதற்கு மாறாக வேலையில்லா திண்டாட்டத்தை தான் அதிகரித்திருக்கிறது.
கடந்த 10 ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சராசரி நிதி பற்றாக்குறை 4.36 சதவிகிதமாக இருந்தது. அது 2014 முதல் 2024 வரையிலான 10 ஆண்டு மோடி ஆட்சியில் 5.13 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதேபோல, மத்திய அரசின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 80 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதே நிலைமை நீடித்தால் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இணையான 100 சதவிகித கடனுள்ள நாடாக 2027 இல் மாறிவிடும் என சர்வதேச நிதி நிறுவனம் எச்சரித்திருக்கிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவி விலகுகிற போது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மானியங்கள் 2.27 சதவிகிதமாக இருந்தது. அது கடந்த நிதியாண்டில் 1.34 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால், விவசாயிகளின் உரமானியம், உணவு மானியம், பெட்ரோல் - டீசல், எரிவாயு மானியம் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு உற்பத்தி துறையை பெருக்குவதற்கு தொழில் வளர்ச்சிக்கான எந்த கொள்கையும் இல்லை. டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இணையாக கடந்த 10 ஆண்டுகளில் எந்த சீர்திருத்தமும் மோடி அரசால் கொண்டு வரப்படவில்லை. அப்பொழுது வரி சீர்திருத்தங்கள் தொழில்துறைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முதலீடுகள் பெருகியது. தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. வேலை வாய்ப்பும் உயர்ந்தது. அத்தகைய தொலைநோக்கு கொள்கைகள் எதுவும் மோடி அரசால் அறிமுகம் செய்யப்பட்டதில்லை.
பொதுவாக மத்திய அரசின் புள்ளியியல் நிறுவனம் நாட்டின் வளர்ச்சி குறித்து அறிவிப்புகளை செய்து வந்தது. ஆனால், பா.ஜ.க. அரசு அதில் தலையிட்டு அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையை மாற்றி, தவறான புள்ளி விவரங்களை வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டது. அதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வளர்ச்சிக்கான புள்ளி விவரங்கள் குறைக்கப்பட்டு, மோடி ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டதாக தவறான புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறது. சுயேட்சையாக செயல்பட்ட மத்திய அரசின் புள்ளியியல் நிறுவனம் தற்போது நம்பகத்தன்மையை முற்றிலுமாக இழந்திருக்கிறது.
அதேபோல, நிதி ஆயோக் தனித்தன்மையுடன் செயல்பட முடியாமல் பா.ஜ.க. அரசின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசில் டாக்டர் மன்மோகன்சிங்குக்கு இணையான தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் எவரும் இல்லை. 1991-ல் நிதியமைச்சராகவும், 2004-ல் பிரதமராகவும் பொறுப்பேற்று 10 ஆண்டு கால ஆட்சியில் அவரால் கொண்டு வரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்றது. அதற்கு துணையாக அன்றைய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் உள்ளிட்ட பல திறமைமிக்க அமைச்சர்களும், பொருளாதார அறிவு நிரம்பிய அதிகாரிகளும் இருந்தார்கள். ஆனால், இப்போது சர்வதேச அங்கீகாரம் கொண்ட எந்த பொருளாதார நிபுணர்களும் மத்திய பா.ஜ.க. அரசில் இல்லை. அதற்கு காரணம், சுயேட்சையான சிந்தனை உள்ளவர்கள் எவரும் மோடி ஆட்சியில் செயல்பட முடியாது என்பதே காரணமாகும்.
சமீபத்தில் பிரதமர் மோடி பேசும் போது 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டிருப்பதாக கூறியிருக்கிறார். 2023 உலக பசிக் குறியீட்டின்படி 125 நாடுகளில் 111-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கடந்த ஆண்டு 107-வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது. நமது சின்னஞ்சிறிய அண்டை நாடான இலங்கை 60-வது இடத்திலும், பாகிஸ்தான் 102-வது இடத்திலும் இருக்கும் போது இந்தியா 111-வது இடத்தில் இருப்பதைப் போல வேறு என்ன அவலம் இருக்க முடியும்? சமீபத்தில் 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்குகிற திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதே நாட்டில் வறுமை ஒழியவில்லை என்பதற்கு சரியான சான்றாகும். 2023-24-ல் இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக மாற்றுவேன் என்று சூளுரை மேற்கொண்டார் பிரதமர் மோடி. அந்த இலக்கு 2025-26ம் ஆண்டுக்கு மாற்றப்பட்டது. அது இப்போது 2027-28க்கு தள்ளி போடப்பட்டுள்ளது. 5 டிரில்லியன் பொருளாதார நாடாக மாற்றுவதற்கு 5 சதவிகித வளர்ச்சி விகிதத்தில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
ஆனால், பொருளாதார வல்லரசாக மாற்றுவேன் என்று கூறுகிற பிரதமர் மோடி இந்தியாவின் தனிநபர் வருமான வரிசையில் உலக நாடுகளில் 143-வது இடத்தில் இருப்பதை அவரால் மறுக்க முடியாது. மோடி ஆட்சியினால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பயனடையவில்லை. குறிப்பிட்ட சில கார்ப்பரேட்டுகள், அதுவும் அதானி, அம்பானி போன்றவர்கள் சொத்துகளை குவிப்பதற்கு உதவியாக இருந்ததே தவிர, ஏழை, எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு எந்த அறிவிப்பும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இல்லை. இத்தகைய ஏமாற்றம் மிகுந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்ததற்கான உரிய பாடம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் பா.ஜ.க.வுக்கு புகட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.