அறச்சலூரில் பரபரப்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட 12 விநாயகர் சிலைகள் அகற்றம் பதற்றம்- போலீஸ் குவிப்பு
12 விநாயகர் சிலைகள் அகற்றம்
அறச்சலூர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 12 விநாயகர் சிலைகள் அகற்றப்பட்டதால் திடீர் பதற்றம் நிலவியது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
அனுமதியின்றி...
விநாயகர் சதுர்த்தியைெயாட்டி அறச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸ் அனுமதியின்றி இந்து மக்கள் கட்சி சார்பில் 20 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 7 விநாயகர் சிலைகள் கடந்த 1-ந் தேதி மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அருகில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் கரைக்கப்பட்டதாக தெரிகிறது. மீதம் உள்ள 13 சிலைகள் அறச்சலூர் பகுதியில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பதற்றம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அறச்சலூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 13 விநாயகர் சிலைகளில் 12 விநாயகர் சிலைகளை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அகற்றி அருகில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் கரைத்தனர். மீதம் உள்ள ஒரு விநாயகர் சிலை நாச்சி வலசு பிரிவு பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பக்தர்கள் விநாயகர் சிலைகளை வழிபட வந்து உள்ளனர். அப்போது விநாயகர் சிலைகள் இல்லாததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் இந்து மக்கள் கட்சியினர் அந்த பகுதியில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் திடீரென பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
பரபரப்பு
இதுகுறித்து ஈரோடு மாநகர் மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அருள்ராஜ் கூறுகையில், 'நாங்கள் கொடுத்த சிலைகளுக்கு பொதுமக்கள் பூஜை செய்து வழிபட வந்தனர். இந்த நிலையில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நள்ளிரவில் பொதுமக்களை போலீசார் கட்டாயப்படுத்தி விநாயகர் சிலைகளை எடுத்து கரைத்து உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது ஆகும்,' என்றார்.
இந்த சம்பவத்தால் அறச்சலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.