அச்சங்குன்றம் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
சுரண்டை அருகே அச்சங்குன்றம் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுரண்டை:
சுரண்டை அருகே அச்சங்குன்றம் கிராமத்தில் டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளி கட்டிடம் பழமையானதால் 2018-ம் ஆண்டு மற்றொரு இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட முடிவு செய்து அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த இடம் அரசு புறம்போக்கு நிலம், எனவே கிராம நிர்வாக அலுவலகம், நூலகம் போன்ற அரசு அலுவலகங்கள் கட்ட வேண்டும். அருகில் இந்து கோவில்கள் உள்ளதால் எதிர்காலத்தில் திருவிழா நேரங்களில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது என தெரிவித்து வந்தனர். மேலும் அச்சங்குன்றம் கிராமத்திற்கு அரசு பள்ளி கேட்டு பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் வீரகேரளம்புதூர் தாசில்தார் சுரண்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அச்சங்குன்றத்தில் மதமோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக ராஜேந்திரன் உள்ளிட்ட 12 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் ராஜேந்திரன் தலைமையில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை முதல் அச்சங்குன்றம் கிராமம், பரங்குன்றாபுரம் விலக்கு மற்றும் சுரண்டை அண்ணா சிலை பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.