கூடலூரில் மீண்டும் ஊருக்குள் நுழைந்து கோழி முட்டைகளை தின்ற உடும்பால் பரபரப்பு
கூடலூரில் மீண்டும் ஊருக்குள் நுழைந்து கோழி முட்டைகளை தின்ற உடும்பால் பரபரப்பு
கூடலூர்
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் கூடலூர் 1-ம் மைல் அருகே மூலவயல் பகுதியில் ராட்சத பல்லி ஒன்று ஊருக்குள் நுழைந்து விட்டதாக பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவியது. தொடர்ந்து அதன் வீடியோ காட்சியும் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இது தொடர்பாக வனத்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மிகவும் வயதான உடும்பு அப்பகுதியில் நடமாடுவது தெரியவந்தது. தொடர்ந்து உடும்பு நடமாட்டத்தை கண்காணித்து அதை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் அதன் நடமாட்டம் எதுவும் தென்படவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் சிலரது வீடுகளில் வளர்த்து வந்த கோழிகளை உடும்பு பிடித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் நேற்று உடும்பு மீண்டும் ஊருக்குள் புகுந்தது. பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த சையது என்பவரது வீட்டில் கோழி ஒன்று முட்டைகளை அடைகாத்தது. இதைக் கண்ட உடும்பு கோழியை நோக்கி சென்றது. இதனால் கோழி அங்கிருந்து ஓடியது. தொடர்ந்து அடைக்காத வைத்திருந்த 5 கோழி முட்டைகளை உடும்பு வேகமாக தின்றுவிட்டு அங்கிருந்து ஓடியது. இதைக் கண்ட சையது குடும்பத்தினர் அச்சமடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியது. இதைத் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் உடும்பை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்கு கொண்டு விட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.