மின் இணைப்பு வழங்காததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற மின் இணைப்பு வழங்காததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2023-01-31 18:45 GMT

திட்டச்சேரி:

ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற மின் இணைப்பு வழங்காததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

ஆழ்துளை கிணறு

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சி மேலத்தெரு மற்றும் கீழத்தெரு பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது.

மின் இணைப்பு வழங்கவில்லை

இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து மேலத்தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு ஊராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் எடுக்க மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுக்கவில்லை. இதனால் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது.

இதன் காரணமாக ஊராட்சி பகுதிகளில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாடு

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கூறுகையில்:-கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி பகுதியில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் மனு அளித்தனர். அதன்படி மேலத்தெரு, கீழத்தெரு பகுதிகளில் உள்ள மக்களின் நலன் கருதி ஆழ்துணை கிணறு அமைக்கப்பட்டது. ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் இதுவரை மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்காததால் குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது.

தற்போது குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதால் மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைத்து வருகிறது.கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படும் நிலை ஏற்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.

காட்சி பொருளாக உள்ளது

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த தங்கராசு கூறுகையில்:-நாங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மிகவும் அல்லல்பட்டோம். இருப்பினும் கோடை காலங்களில் தண்ணீர் கிடைக்க எதுவாக மாவட்ட ஊராட்சியால் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற அமைக்கப்பட்ட மோட்டாருக்கு இன்னும் மின் இணைப்பு வழங்காததால், அது செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது.இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது ஒருமுறை மின் இணைப்பு வழங்க கோரி மின்வாரியத்திற்கு பணம் செலுத்தி காலாவதியாகி விட்டதாகவும், மறுபடியும் 2-வது முறையாக பணம் செலுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

நடவடிக்கை

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுத்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்