பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் மாணவி விஷம் குடித்ததால் பரபரப்பு

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் மாணவி விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-19 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் மாணவி விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு பள்ளி மாணவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் நேற்று காலை 11 மணிக்கு இடைவேளை விடப்பட்டது. அப்போது வகுப்பறையில் அமர்ந்திருந்த ஒரு மாணவி திடீரென்று புத்தக பையில் இருந்து சாணி பவுடர் (விஷம்) எடுத்து தண்ணீரில் கலந்து குடித்தார்.

இதை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் அந்த மாணவியை மீட்டு உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். பின்னர் அங்கு அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 14 வயதான அந்த மாணவி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது. மேலும் அந்த மாணவியுடன் படிக்கும் சக மாணவி ஒருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அந்த மாணவியுடன் பேசக் கூடாது என்று கூறியதாக தெரிகிறது.

இதற்கிடையில் விஷம் குடித்த மாணவியுடன் மற்ற மாணவிகள் சிலரும் பேசாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவி நேற்று வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் போது சாணிபவுடரை கடையில் இருந்து வாங்கி சென்று உள்ளார். அதன்பிறகு வகுப்பறையில் வைத்து குடித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் விஷம் குடித்த மாணவிக்கும், பள்ளியில் மற்ற மாணவ-மாணவிகளுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். பள்ளி வகுப்பறையில் மாணவி விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்