போலீஸ் நிலையத்தில் நரிக்குறவ பெண்கள் திரண்டதால் பரபரப்பு
விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை விடுவிக்கக்கோரி அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் நிலையத்தில் நரிக்குறவ பெண்கள் திரண்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணைக்காக
அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று முன்தினம் இரவு அரக்கோணத்தை அடுத்த தணிகை போளூர் நரிக்குறவர் பகுதியில் இருந்து சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக 5 பேரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் நரிக்குறவ பெண்கள் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தின் முன் திரண்டனர். அவர்கள் விசாரணைக்காக அழைத்து வந்தவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கூறி கூச்சலிட்டனர்.
பரபரப்பு
இது குறித்து போலீசார் கூறுகையில் அழைத்து வரப்பட்டவர்களிடம் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் பற்றிய விவரம் தெரிய வந்தால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், ஆடி கிருத்திகை விழாவின் போது திருத்தணி ரெயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும், அவ்வாறு ஈடுபடும் போது ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பினோம் என்று தெரிவித்தனர்.
பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் முன் நரிக்குறவர் பெண்கள் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.