ராமேசுவரம் கோவிலில் சாமியை தரிசிக்க முடியாமல் பல இடங்களில் தடுப்பு கம்பிகள்
ராமேசுவரம் கோவிலில் சாமியை தரிசிக்க முடியாமல் பல இடங்களில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலில் சாமியை தரிசிக்க முடியாமல் பல இடங்களில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
ராமேசுவரம் கோவில்
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாகவும் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும் காசிக்கு நிகராகவும் கருதப்படுவது ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே பக்தர்கள் பல சன்னதிகளுக்கு சென்று நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாத அளவிற்கு கோவிலின் பிரகாரங்களில் பல இடங்களில் தடுப்பு கம்பிகள் வைத்து பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே தற்போது பக்தர்கள் கிழக்கு வாசல் சாமி சன்னதி வழியாக செல்ல கோவில் நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.100 மற்றும் ரூ.200 சிறப்பு தரிசன டிக்கெட்டில் செல்லும் பக்தர்கள் மட்டுமே கிழக்கு வாசலின் சாமி சன்னதி வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சாமி சன்னதி வழியாக அனுமதிக்கப்படாமல் அம்மன் சன்னதி வாசல் வழியாக தடுப்பு கம்பிகள் அமைத்து அதன் வழியாக வரிசையில் செல்கிறார்கள். இதனால் கூடுதல் நேரம் கோவிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
தடுப்பு கம்பிகள்
மூன்றாம் பிரகாரம், அம்மன் சன்னதி பிரகாரம், சாமி சன்னதி பிரகாரம் வரை அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் வழியாக முதல் பிரகாரம் சென்று அதன் பின்னர் இலவச தரிசன பாதையில் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
பொதுவாக ஆகம விதிமுறைபடி சிவன் கோவிலில் முதலில் சாமியை தரிசனம் செய்து விட்டு தான் பக்தர்கள் அம்பாளை தரிசிக்க வேண்டும். அதன்பிறகு அம்பாள் சன்னதி வாசல் வழியாகவே வெளியே வரவேண்டும் என்பது ஆகம விதிமுறை.
ஆனால் ராமேசுவரம் கோவிலிலோ ஆகம விதிமுறைகளை மீறி பக்தர்களை சாமி சன்னதி வாசல் வழியாக அனுமதிக்காமல் அம்பாள் சன்னதி வாசல் வழியாகவே கோவில் நிர்வாகம் அனுமதித்து வருவதோடு மட்டுமல்லாமல் மூன்றாம் பிரகாரத்தின் குறுக்கே மைய பகுதி மற்றும் அம்மன் சன்னதி உள்பகுதி வாசல் அருகே என கோவிலின் உள்ளே பல இடங்களில் தடுப்பு கம்பிகளை அமைத்து பிரகாரத்தையும் மறைத்து வைத்துள்ளனர்.
பக்தர்கள் வேதனை
இது மட்டுமில்லாமல் பக்தர்கள் காசி விஸ்வநாதர், முருகன் சன்னதி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளுக்கும் செல்ல முடியாத அளவிற்கு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாமல் கஷ்டப்படுவதோடு மட்டுமல்லாமல் கோவிலின் சாமி சன்னதி பிரகாரம் மற்றும் மூன்றாம் பிரகாரத்தையும் சுற்றிவர முடியாமலும் கஷ்டப்படுகின்றனர். கோவில் நிர்வாகத்தினரின் இந்த செயல் பக்தர்களை வேதனைக்குள்ளாக்கிறது. எனவே தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.