ஷேர் ஆட்டோவை திருட முயன்ற வாலிபர்
ஷேர் ஆட்டோவை திருட முயன்ற வாலிபர் சிக்கினார்.;
பெரம்பலூர் மாவட்டம், தம்பிரான்பட்டி மேற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 50). இவர் சொந்தமாக ஷேர் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு சரவணன், அந்த ஆட்டோவை தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தாா். அப்போது இரவு 9 மணியளவில் ஆட்டோவை யாரோ இயக்குவது போன்று சத்தம் கேட்டது. இதனால் சரவணன் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, வாலிபர் ஒருவர் மது போதையில் ஆட்டோவில் இருந்தார். அவர் யார்? என்று சரவணன் கேட்டபோது, அவரை அந்த நபர் சிறிய கட்டையால் தாக்க முயன்றார். இதனால் சரவணன் திருடன்..., திருடன்... என்று கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த நபர் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அந்த நபர் யார்? எந்த ஊரைச் சோ்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சென்னை பகுதியை சேர்ந்த பழனிவேலின் மகன் பாலமுருகன் (28) என்பது தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.