குடியரசு தின தடகளப்போட்டியில் தேனி, சேலம் அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்

திருவண்ணாமயைில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின தடகளப்போட்டியில் ஆண்கள் பிரிவில் தேனி மாவட்டமும், பெண்கள் பிரிவில் சேலம் மாவட்டமும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றன. அவர்களுக்கு பரிசுக்கோப்பையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

Update: 2022-11-30 17:06 GMT


திருவண்ணாமயைில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின தடகளப்போட்டியில் ஆண்கள் பிரிவில் தேனி மாவட்டமும், பெண்கள் பிரிவில் சேலம் மாவட்டமும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றன. அவர்களுக்கு பரிசுக்கோப்பையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

குடியரசு தின தடகள போட்டி

பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான 63-வது குடியரசு தின தடகளப் போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 25-ந் தேதி தொடங்கி நேற்று வரை 6 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து 7 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 14, 17, 19 என்ற வயதின் அடிப்படையில் முதல் 3 நாட்கள் வீராங்கனைகளுக்கும், அடுத்த 3 நாட்கள் வீரர்களுக்கும் என்று நடைபெற்றது.

இதில் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கோல் ஊற்றி தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன.

இந்த நிலையில் நேற்று மாலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவில் குடியரசு தின தடகளப் போட்டிகளுக்கான நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என். அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி வரவேற்றார்.

ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம்

சிறப்பு அழைப்பாளராக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு ஆண்கள் பிரிவில் 46 புள்ளிகள் பெற்ற தேனி மாவட்ட அணியினருக்கும், மகளிர் பிரிவில் 55 புள்ளிகள் பெற்ற சேலம் மாவட்ட அணியினருக்கும் தனித் தனியே ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்திற்கான கோப்பையை வழங்கி பாராட்டினார்.

மேலும் அதிக பதக்கங்களை பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கும் கோப்பைகளை வழங்கினார். முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் அனைத்து பிரிவுகளிலும் முதல் 3 இடம் பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:-

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களை அடையாளம் தெரிந்துகொள்ள தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தந்து உள்ளார். இதில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்கள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதே போல் கடந்த ஆண்டுகளில் வெற்றி பெற்ற 320 வீரர், வீராங்கனைகள் குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 20 தங்கம், 22 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 70 பதக்கங்களை வென்று இந்திய அளவில் தமிழகம் தான் அதிக பதக்கங்களை வென்று முதலாவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது.

சிறந்த வீரர், வீராங்கனைகளாக...

எனவே தற்போது கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் பல்வேறு சாதனைகளை தேசிய அளவில் படைக்க வேண்டும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் உடல் வலிமை பெறும், நல் ஒழுக்கம் பெற முடியும். எனவே விளையாட்டில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் உலகமே நம்மை உற்று நோக்கும். இந்த ஒரு அரிய வாய்ப்பினை விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பயன்படுத்தி சமுதாயத்தில் சிறந்த வீரர், வீராங்கனைகளாக வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான 200 மீட்டர் இறுதி சுற்று ஓட்டப்பந்தயத்தினை அமைச்சர் பார்வையிட்டார். விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பலாமுருகன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட உற்கல்வி அலுவலர் முத்துவேல் உள்பட பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்