தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் தற்காலிக பணியிடை நீக்கம்

லஞ்சம் வாங்கிய புகாரில் தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

Update: 2023-07-30 14:07 GMT

தேனி,

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் உணவு தேவைக்காக மருத்துவமனை வளாகத்தில் கேண்டின்கள் அமைக்கப்பட்டுள்ளன. . இந்த நிலையில் கேன்டீன்களில் உள்ள குடிநீர் குழாய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேன்டீன் நடத்தி வரும் மாரிச்சாமி என்பவர் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அப்போது குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டுமானால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மீனாட்சி சுந்தரம் கூறியதாகவும் கூறப்படுகிறது

இதனையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டின் அமைத்துள்ள மாரிச்சாமி என்பவர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்த நிலையில் தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.உணவக உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் மீனாட்சி சுந்தரம் மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

" தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உணவக உரிமையாளர் மாரிசாமியிடம் லஞ்சம் கேட்டு பெற்றதாக ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேனி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனரை நேரில் சென்று உணவக உரிமையாளரிடம் நடைபெற்ற ஊடகத்தில் வெளியான செய்தி உண்மைதானா? என்று விசாரணை நடத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார் .

விசாரணையின் அடிப்படையில், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் வாங்கியது உண்மை என்று தெரியவந்த காரணத்தினால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்