தேனி அரசு ஆஸ்பத்திரியில்பணிக்கு வராத டாக்டர் மீது நடவடிக்கை:மருத்துவமனை முதல்வர், அரசுக்கு பரிந்துரை

தேனி அரசு மருத்துவமனையில் பணிக்கு வராத டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவமனை முதல்வர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

Update: 2023-05-19 18:45 GMT

ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கில் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு தலைக்காய சிகிச்சைக்கான வசதி இல்லாததால் விபத்தில் தலையில் காயம் அடைந்தவர்களை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளது. இதில் மதுரைக்கு செல்லும் வழியிலேயே இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். தேனி அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 30-க்கும் மேற்பட்டோர் தலைக்காய சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தலைக்காய சிகிச்சைக்கான நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டரான சந்தானகிருஷ்ணன் பணியில் சேர்ந்த நாள் முதல் தற்போது வரை சரிவர பணிக்கு வரவில்லை என்றும், தொடர் விடுமுறை மற்றும் பல்வேறு காரணங்களை கூறி மருத்துவமனைக்கு வராமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சைக்கு வருவோர் உரிய சிகிச்சை கிடைக்காமல் தவிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக டாக்டர் சந்தானகிருஷ்ணனுக்கு மருத்துவமனை சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நோட்டீசுகளுக்கும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்றும் தெரிகிறது.

இதனையடுத்து பணிக்கு வராத நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டர் சந்தானகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு புதிய நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று மருத்துவகல்லூரி இயக்குனரும், தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வருமான டாக்டர் மீனாட்சிசுந்தரம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் செய்திகள்