கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு
வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ரூ.2 லட்சம் திருட்டு
சென்னையை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் காரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பெங்களுரூ நோக்கி சென்று கொண்டிருந்தார். காலை 10 மணியளவில் டிபன் சாப்பிடுவதற்காக வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் உள்ள ஓட்டல் முன்பாக காரை நிறுத்தி விட்டு, கண்ணாடிகளை பூட்டி சென்றார்.
காரில் ரூ.2 லட்சம் ரொக்கம், வீட்டின் சாவி மற்றும் சில ஆவணங்கள் இருந்துள்ளன. ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சிறிதுநேரத்துக்கு பின்னர் வாலிபர் வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கார் கதவை திறந்து பார்த்தார். அங்கு வைத்திருந்த ரூ.2 லட்சம், சாவி ஆகியவை திருட்டு போயிருந்தது.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
இதுகுறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று காரை பார்வையிட்டனர். பின்னர் அந்த வாலிபர் மற்றும் அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள், ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறுகையில், கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்கள் யார் என்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். ஓரிருநாளில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பிடிபடுவார்கள். கார் கண்ணாடியை உடைத்து பணம் திருடியது தொடர்பாக வாலிபர் இதுவரை புகார் அளிக்கவில்லை என்றனர்.