ஆத்தூர்:-
ஆத்தூர் உடையார்பாளையம் நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் துரை (வயது 42). இவருடைய மனைவி நிஷா. இவர்கள் ஆத்தூர் புறவழிச்சாலையில் மூங்கில்களால் ஆன கூடை உள்பட பல்வேறு கைவினைப்பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கைப்பையில், ரூ.97 ஆயிரத்துடன் வீட்டுக்கு வந்தனர். பின்னர் துரை, பணம் இருந்த கைப்பையை ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டு, தூங்கச்சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர், ஜன்னலை திறந்து, கைப்பையில் இருந்த ரூ.97 ஆயிரத்தை திருடிக்கொண்டு ஓடி விட்டார். காலையில் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த துரை, ஆத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.