காய்கறி கடையில் பணம் திருட்டு
தியாகதுருகம் காய்கறி கடையில் பணம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் மீனாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 55), இவர் சேலம் மெயின் ரோடு பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், வழக்கம்போல் கடையை பூட்டுவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை அவர் திரும்பி வந்துபார்த்தார். அப்போது கடையின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே கடைக்குள் சென்றுபார்த்தார். அப்போது அங்கிருந்த கல்லா பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து சிறு, சிறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.