வீட்டில் நகை- பணம் திருட்டு
பணகுடி அருகே வியாபாரி வீட்டில் நகை- பணத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.
பணகுடி:
பணகுடி அருகே உள்ள பாம்பன்குளத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 38). இவர் காவல்கிணறு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மதுரைக்கு காய்கறிகள் வாங்குவதற்காக அய்யனார் சென்று விட்டார். இதனால் அவரது மனைவி ராஜபிரியா (32) அதே ஊரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இரவில் தங்கினார். காலையில் ராஜபிரியா வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வீட்டில் வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 8 பவுன் தங்கநகை, ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.