கோவிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு

கபிஸ்தலம் அருகே கோவிலில் நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2023-08-27 01:46 IST

கபிஸ்தலம் அருகே கோவிலில் நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

முத்துமாரியம்மன் கோவில்

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் ஊராட்சி மண்ணியார் வாழ்க்கை கிராமத்தில் புது காலனி தெருவில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து முத்து மாரியம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 4 கிராம் தங்க சங்கிலியை திருடி உள்ளனர்.

மேலும் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.6 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். மறுநாள் காலை கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதையும், அம்மன் கழுத்தில் நகை திருடப்பட்டு இருந்ததையும் கண்ட கிராம மக்கள் உடனடியாக கபிஸ்தலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

வலைவீச்சு

தகவலின்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவில் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. அம்மன் கழுத்தில் இருந்த நகை மற்றும் உண்டியல் பணம் திருடப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வாக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்