விழுப்புரம் அருகே4 வழிச்சாலை கட்டுமான பணிக்கான இரும்புக்கம்பிகள் திருட்டுரெயில்வே கேட் கீப்பர் உள்பட 2 பேர் கைது

விழுப்புரம் அருகே 4 வழிச்சாலை கட்டுமான பணிக்காக வைத்திருந்த இரும்புக்கம்பிகளை திருடிய ரெயில்வே கேட் கீப்பர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-21 18:45 GMT


விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே தற்போது 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இதில் விழுப்புரம்- புதுச்சேரி இடையே அமைக்கப்பட்டு வரும் சாலை பணியின் ஒப்பந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக சென்னை கல்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் மகன் ராஜ்குமார் (வயது 26) என்பவர் இருந்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் விழுப்புரத்தை அடுத்த கொளத்தூர் அய்யனாரப்பன் கோவில் அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் நடந்து வரும் தேசிய நெடுஞ்சாலைப்பணிகளை மேற்பார்வையிட சென்றார். அப்போது அங்கு மேம்பால பணிக்காக வைத்திருந்த இரும்புக்கம்பிகளை 2 பேர் திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர்.

2 பேர் கைது

இதைப்பார்த்த ராஜ்குமார், அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் அவர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்து விழுப்புரம் தாலுகா போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் கொளத்தூரை சேர்ந்த சிவக்குமார் மகன் சரண்ராஜ் (30), விழுப்புரம் மேட்டுத்தெருவை சேர்ந்த அய்யப்பன் (53) என்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 40 கிலோ இரும்புக்கம்பிகளை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து சரண்ராஜ், அய்யப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த இரும்புக்கம்பிகளை பறிமுதல் செய்தனர். கைதான அய்யப்பன், விழுப்புரம் சாலாமேட்டில் ரெயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்