3 செல்போன் கோபுரங்களில் ரூ 78 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் திருட்டு
சங்கராபுரம் பகுதியில் 3 செல்போன் கோபுரங்களில் ரூ 78 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சங்கராபுரம்
சங்கராபுரம்-பூட்டை சாலையில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரத்தில் இருந்த விலை உயர்ந்த உபகரணங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று வி்ட்டனர். இதன் மதிப்பு ரூ.18 லட்சத்து 45 ஆயிரத்து 852 என கூறப்படுகிறது. இது குறித்து அந்த செல்போன் நிறுவனத்தின் ஊழியர் சென்னை, கீழ்பாக்கத்தை சேர்ந்த பிரிசிங்சிராஜ்(வயது 59) கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் தனியார் செல்போன் கோபுரத்தில் இருந்த ஜெனரேட்டர், பேட்டரி உள்ளிட்ட ரூ.34 லட்சத்து 59 ஆயிரத்து 591 மதிப்பிலான உபகரணங்களையும், தேவபாண்டலத்தில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் ரூ.25 லட்சத்து 66 ஆயிரத்து 333 மதிப்புள்ள உபகரணங்களையும் யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டதாக அந்த நிறுவனத்தின் கட்டுமான அதிகாரி சென்னை, கீழ்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக்(29) சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் கோபுரங்களில் உபகரணங்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறாா்கள்.