ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கதவுகள், ஜன்னல்கள் திருட்டு

வேப்பூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-08-16 19:08 GMT

ராமநத்தம், 

வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் பழுதானதால் கடந்த சில மாதங்களாக பயன்படுத்தப்படாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அங்குள்ள நூலக கட்டிடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் இருந்த 2 இரும்பு கதவு மற்றும் 6 இரும்பு ஜன்னல்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் இல்லாமல் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் வலைவீச்சு

இது குறித்து தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதவுகள் மற்றும் ஜன்னல் கம்பிகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்