மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருட்டு

மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்து மூதாட்டியிடம் 3 பவுன் நகையை திருடிவிட்டு தப்பி ஓடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-07-25 16:24 GMT

பொள்ளாச்சி

மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்து மூதாட்டியிடம் 3 பவுன் நகையை திருடிவிட்டு தப்பி ஓடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பூக்கடை

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்ஊத்துக்குளியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 60). இவர் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த ஒரு வாரமாக பெண் ஒருவர் வந்து சென்றார். இதையடுத்து 2 பேருக்கு இடையில் பழக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையில் வழக்கம் போல் முத்துலட்சுமியின் பூக்கடைக்கு அந்த பெண் வந்தார். இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் வீட்டிற்கு முத்துலட்சுமி செல்லும் போது, அந்த பெண்ணும் உடன் சென்றதாக தெரிகிறது. பின்னர் வீட்டிற்கு சென்றதும் அந்த பெண் ஜூஸ் போட்டு தருவதாக முத்துலட்சுமியிடம் கூறி உள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண் மாதுளை ஜூஸ் போட்டுக் கொண்டு வந்து முத்துலட்சுமியிடம் கொடுத்தார்.

போலீசார் விசாரணை

அதை குடித்த சிறிது நேரத்தில் முத்துலட்சுமி மயங்கி விழுந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து பார்த்த போது, அந்த பெண் வீட்டில் இல்லை. மேலும் தான் அணிந்திருந்த கம்மல், நகை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி நகர மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பவுன் நகையை திருடு போனது தெரியவந்தது.

மேலும் முத்துலட்சுமி பூக்கடை நடத்தி வரும் பகுதி மற்றும் வீட்டின் அருகில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் மயக்க மருந்து கலந்த ஜூஸ் குடித்ததில் உடல் நிலை பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்