பூந்தமல்லியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு
பூந்தமல்லியில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி, மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார். சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பூபாலன் என்பவர் நூம்பலில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
மேலும் வீட்டின் உரிமையாளர் சம்பத்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை மர்மநபர்கள் அள்ளிச்சென்று உள்ளனர்.
அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டுபோன சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வீட்டு உரிமையாளர் சம்பத்குமார் வீட்டில் திருடிய கொள்ளையர்கள், அங்கிருந்த மற்ற வீடுகளின் சாவி கொத்தை எடுத்து வந்து வாடகைக்கு இருந்த பூபாலன் வீட்டின் கதவை திறந்து கொள்ளையடித்ததும் தெரிந்தது.
ஆனால் மற்ற வீடுகளில் ஆட்கள் இருந்ததால் அந்த வீடுகளில் கொள்ளையடிக்காமல் மர்மநபர்கள் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் புழல் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
பின்னர் தனது வீட்டுக்கு திரும்பி வந்தபோது, மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.