கோவில் ,3 கடைகளில் திருட்டு

குளச்சலில் ஒரே நாளில் கோவில், 3 கடைகளில் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-07-11 15:57 GMT

குளச்சல்:

குளச்சலில் ஒரே நாளில் கோவில், 3 கடைகளில் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

அம்மன் கோவில்

குளச்சல் களிமார் பாலத்தின் அருகில் சாலையோரம் பாலத்து இசக்கி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று அதிகாலையில் பூசாரி கோவிலை திறக்க வந்த போது கிரில் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், கோவிலில் இருந்த உண்டியல் பெயர்த்து எடுத்து செல்லப்பட்டு இருந்தது.

இரவில் யாரோ மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பூசாரி அய்யப்பன் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பழக்கடை

குளச்சல் பழைய மார்க்கெட்டை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது46). இவர் குளச்சல் களிமார் பாலம் அருகே பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலையில் ராஜேஷ் கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையில் சில்லறை காசுகள் வைத்திருந்த பெட்டி, சிகரெட் போன்ற பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து ராஜேஷ் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனதாக கூறியுள்ளார்.

இந்த கடையில் ஒரு மாதத்திற்கு முன்பு மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து ரூ. 22 ஆயிரத்தை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.

2 பெட்டி கடைகள்

குளச்சல் லியோன் நகரில் சுபீஸ் (35) என்பவர் பெட்டிகடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் கடையின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து மிட்டாய், சிகரெட் என ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சுபீஸ் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

இதுபோல், குளச்சல் அருகே பாலத்தின் அருகில் நேசம் (74) என்ற மூதாட்டி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரின் கடையின் மரக்கதவை மர்ம நபர்கள் உடைத்து சிகரெட் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

குளச்சலில் ஒரே நாள் இரவில் கோவில், 3 கடைகள் என 4 இடங்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்