ஓட்டல், நகை பட்டறையில் திருட்டு
பழனியில், ஓட்டல் மற்றும் நகை பட்டறையில் திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.;
பழனி பெரியகடை வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 45). இவர், அந்த பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை பட்டறையை திறந்து உள்ளே சென்றார். அப்போது மேற்கூரை உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அங்கிருந்த ரூ.1,500 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி கம்பி திருட்டு போய் இருந்தது. மேற்கூரையை உடைத்து, மர்ம நபர்கள் வெள்ளி கம்பியை திருடி சென்றது தெரியவந்தது.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (43) என்பவரின் ஓட்டலிலும், மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை திருடி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் திருட்டு நடந்த ஓட்டல், நகை பட்டறையை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 2 கடைகளில் நடந்த திருட்டு சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.