திண்டுக்கல்லில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் 20 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
திண்டுக்கல்லில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் 20 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோனது.
திண்டுக்கல்லில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் 20 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோனது.
நிதி நிறுவன அதிபர்
திண்டுக்கல்லில், பழைய கரூர் சாலையில் உள்ள ஜி.எஸ்.நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 57). இவர் திண்டுக்கல் நாகல்நகரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27-ந்தேதி ரவிச்சந்திரன் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இந்தநிலையில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன், வீட்டுக்குள் சென்று பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதனுள் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.40 ஆயிரம் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு ரவிச்சந்தரன் தகவல் தெரிவித்தார்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், ரவிச்சந்திரனின் வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதற்கிடையே மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டு, அந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் அந்த நாய் ஓடியது. ஆனால் யாரையும் கவி பிடிக்கவில்லை. அதேபோல் கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் தடயங்களை சேகரித்தனர்.
மேலும் இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகைகள், பணம் திருடுபோன துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.