செல்போன் கடையில் ஜன்னல் கம்பியை உடைத்து திருட்டு

நாகர்கோவிலில் செல்போன் கடையின் ஜன்னல் கம்பியை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-01-10 20:33 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் செல்போன் கடையின் ஜன்னல் கம்பியை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

செல்போன் கடை

நாகர்கோவில் கேப் ரோட்டை சேர்ந்தவர் நிஷார் (வயது 34). இவர் நாகர்கோவில் அலெக்சாண்டிரா பிரஸ் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் மாடியில் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். நிஷார் சில நாட்களுக்கு முன்பு சொந்த வேலை விஷயமாக கோவைக்கு புறப்பட்டு சென்றார். கடையை அவரது உறவினர் கவனித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு உறவினர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் கடையை திறக்க வந்த போது கடையின் முன்புறமுள்ள ஜன்னல் கம்பி யை உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த விலை உயர்ந்த 7 செல்போன்கள், மேஜையில் இருந்த ரொக்கப்பணம் ரூ.6,200-ம் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது. இரவில் யாரோ மர்ம நபர்கள் ஜன்னல் கம்பி உடைத்து உள்ளே புகுந்து செல்போன், பணத்தை திருடி சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கடையில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். போக்குவரத்து நெரிசலும், மக்கள் நெருக்கடியும் மிகுந்த பகுதியில் இந்த திருட்டுச் சம்பவம் நடந்திருப்பது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்