இணையதளத்தில் முதலீடு செய்தால் அதிக கமிஷன் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி:
இணையதளத்தில் முதலீடு செய்தால் அதிக கமிஷன் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இணையதளத்தில் முதலீடு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் 32 வயது பெண். இவர் கடந்த 13.10.2022 அன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தார். அதில் பகுதி நேர பணி செய்வது தொடர்பான விளம்பரம் வந்திருந்தது.
இதையடுத்து அதில் இருந்த வாட்ஸ் அப் எண்ணை அப்பெண் தொடர்பு கொண்டார். அதில் எதிர் முனையில் பேசிய நபர், குறிப்பிட்ட ஒரு இணையதளத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக கமிஷன் பெறலாம் என்று கூறினார்.
ரூ.3.10 லட்சம் மோசடி
இதை நம்பி எதிர்முனையில் பேசியவர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் தொகையை ஜி.பே., பே.டி.எம். மூலமாக அனுப்பி வைத்தார். அந்த தொகை கிடைத்த பிறகு அந்த வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண், எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.