50 பவுன் நகை திருடிய 2 பெண்கள் கைது

பரமக்குடியில் 50 பவுன் நகைகளை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-04 18:45 GMT

பரமக்குடி, 

பரமக்குடியில் 50 பவுன் நகைகளை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

50 பவுன் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வேதாந்தமடம் தெருவை சேர்ந்தவர் சாந்தாராம் (வயது 71). இவர் நகைகளை அடமானமாக பெற்று பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் பரமக்குடி அருகே உள்ள குமரக்குடியை சேர்ந்த ஆனந்தன் மனைவி நந்தினி (34) என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நகையை அடமானம் வைத்து ரூ.70 ஆயிரம் கடனாக பெற்றாராம். அந்த நகையை திருப்பாததால் சாந்தாராம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

கடந்த 1-ந் தேதி நந்தினி அவரது தோழியான பரமக்குடியை சேர்ந்த வசந்தி (34) என்பவரையும் அழைத்து கொண்டு சாந்தாராமின் வீட்டிற்கு சென்றார். இருவரும் அவரிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஏதோ மயக்க பொடியை தூவியதாக கூறப்படுகிறது, சிறிது நேரத்திலேயே திடீரென சாந்தாராம் மயக்கம் அடைந்தார். உடனே இருவரும் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகளை திருடி சென்றனர்.

2 பெண்கள் கைது

இதற்கிடையே சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து பார்த்த சாந்தாராம், நந்தினி, வசந்தி இருவரையும் காணாததை கண்டு சந்தேகம் அடைந்தார். பின்னர் அவர் பீரோவை பார்த்த போது அதில் நகைகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் இது குறித்து பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சாந்தாராம் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இஸ்லாத் வழக்குப்பதிவு செய்து நந்தினி, வசந்தி இருவரையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்