ஒரே நாளில் 5 விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் மின் சாதனங்கள் திருட்டு

ஒரத்தநாடு அருகே ஒரே நாள் இரவில் 5 விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் மின் வயர் -சாதனங்களை திருடி சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-07 19:30 GMT

விவசாயிகள் சாலை மறியல். 

ஒரத்தநாடு அருகே ஒரே நாள் இரவில் 5 விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் மின் வயர் -சாதனங்களை திருடி சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மின் வயர் திருட்டு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் விவசாயிகள் பல லட்சம் செலவில் நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, மின்சார நீர்மூழ்கி மோட்டார் பொருத்தி அதன் மூலம் தண்ணீர் எடுத்து சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த நீர் மூழ்கி மோட்டாருக்கு செல்லும் காப்பர் வயர்களையும், மின்சாதன பொருட்களையும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தொடர்ந்து திருடி சென்று வருகிறார்கள். இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்தும் வருகின்றனர். இந்த நிலையில் ஒரத்தநாட்டை அடுத்துள்ள புலவன்காடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாரியப்பன், சாம்பசிவம், இன்பவள்ளி, வாணிலா, கிருஷ்ணகுமார் ஆகிய 5 பேருக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறுகளின் மின் வயர்களையும், மின்சாதன பொருட்களையும் இரவில் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

விவசாயிகள் திடீர் சாலை மறியல்

தொடர்ந்து விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் மின் வயர்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வரும் நிலையில், ஒரே நாள் இரவில் 5 விவசாயிகளுக்கு சொந்தமான மின் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றதால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், கல்லணை கால்வாய் வடகாடு பாசனதாரர் சங்கத் தலைவர் மாரியப்பன் தலைமையில் கிராம மக்களை திரட்டி நேற்று காலை தஞ்சை -பட்டுக்கோட்டை சாலையில் புலவன்காடு பஸ் நிறுத்தம் அருகே மாட்டு வண்டியை சாலையின் குறுக்கே நிறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த தொடர் திருட்டு சம்பவத்தை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விரைவாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்