மது ஆசைகாட்டி பணம், வாகனத்தை திருடிய வாலிபர்
மது ஆசைகாட்டி பணம், வாகனத்தை வாலிபர் திருடிசென்று விட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கொம்பூதி மேலமடை பகுதியை சேர்ந்தவர் கருப்பையா மகன் சக்திகுமார் (வயது35). இவர் ஆற்றங்கரை ரேஷன்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இதுதவிர, தேர்போகி ரேஷன்கடையையும் கூடுதல் பொறுப்பாக பார்த்து வருகிறாராம். ஆர்.எஸ்.மடை பகுதியில் அவரை வழிமறித்து அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். மதுகுடிக்கலாம் என்று ஆசைகாட்டி திருப்புல்லாணி அரசு மதுபானகடையில் மது அருந்தி உள்ளார். ஒருகட்டத்தில் மதுபோதை அதிகமான நிலையில் மர்ம நபர் சக்திகுமாரின் மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்து வெளியில் சென்று மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாராம். போதை தெளிந்து பார்த்த சக்திகுமார் உடன் வந்தவரை காணாததை கண்டு தன் சாவியையும் மோட்டார் சைக்கிளையும் காணாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மதுகுடிப்பது போல் நடித்து தனக்கு மதுபோதை ஏறியதும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது வாகனத்தை எடுத்து கொண்டு சென்றது தெரிந்தது. அந்த இருசக்கர வாகனத்தில் ரேஷன்கடை பில் எந்திரம், ரூ.10ஆயிரம் இருந்துள்ளது. இவற்றுடன் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்ற நபர் மீது சக்திகுமார் திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.