வீட்டில் நகை, பணம் இல்லாததால் டி.வி.யை திருடி சென்ற மர்ம நபர்கள்
வீட்டில் நகை, பணம் இல்லாததால் டி.வி.யை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
தேவகோட்டை,
தேவகோட்டை ராம்நகர் பகுதியில் வசித்து வருபவர் அன்னம்மாள் மேரி (வயது 65). இவருடைய கணவர் இறந்து விட்டார். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இதனால் அன்னம்மாள் மேரி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலையில் அன்னம்மாள் மேரி மீண்டும் வீட்டுக்கு வந்த போது கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். அங்கு பீரோ திறக்கப்பட்டு துணிமணிகள் சிதறி கிடந்தன. வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள எல்.சி.டி. டி.வி.யை திருடி சென்றனர்.
இதுகுறித்து அன்னம்மாள் மேரி தேவகோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.