நகராட்சி நிர்வாகத்தால் பிடிக்கப்பட்ட 28 மாடுகள் திருட்டு

கீழக்கரையில் நகராட்சி நிர்வாகத்தால் பிடிக்கப்பட்ட 28 மாடுகளை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

Update: 2022-10-06 17:49 GMT

கீழக்கரை, 

கீழக்கரையில் நகராட்சி நிர்வாகத்தால் பிடிக்கப்பட்ட 28 மாடுகளை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

இடையூறு

கீழக்கரையில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 21 வார்டுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளில் மாடுகள் வளர்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் கீழக்கரையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் விபத்துகள் ஏற்படும் நிலை இருந்து வந்தது. மேலும் வீதிகளில் சாணம் போடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்கள் முகம்சுளிக்கும் நிலை இருந்து வந்தது.

இதனால் நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் தெருக்களிலும் வீதிகளிலும் சுற்றித் திரிந்த 28 மாடுகள், ஒரு கன்றை பிடித்து தனியார் நிலத்தை வாடகைக்கு எடுத்து மாடுகளை அடைத்தனர். மாடுகளை அடைத்து 10 நாட்கள் ஆகியும் மாட்டின் உரிமையாளர்கள் யாரும் வரவில்லை. நகராட்சி மூலம் மாடுகளுக்கு தேவையான தீவனங்கள் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டன. இந்த நிலையில் நகராட்சி ஊழியர்கள் மாடுகளுக்கு தீவனம் வைக்க சென்றுள்ளனர். அப்போது மாடு அடைக்கப்பட்டு இருந்த கேட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 28 மாடுகளையும் திருடி சென்றது தெரியவந்தது.

புகார்

இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்தபகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இதுகுறித்து நகர்மன்ற தலைவர் செகானாஸ் ஆபிதா கூறியதாவது:- பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் வீதிகளில் சுற்றி திரிந்தால் மாட்டின் உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிப்பதோடு அரசுக்கு சொந்த மான கால்நடை பராமரிப்பு நிலையத்தில் மாட்டை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்