100 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை திருட்டு
100 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி,
இன்று வரை கிராமப்புற பகுதிகளில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்றால் புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலையை விட, ஏதாவது ஒரு கோவிலில் உள்ள விநாயகர் சிலையை திருடி கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தால் பலன் அதிகம் என நம்பிக்கை உள்ளது. இதை ராகவா லாரன்ஸ் நடித்த பாண்டி என்ற திரைப்படத்திலும் காட்சிப்படுத்தபட்டு இருக்கும்.இந்த திரைப்பட பாணியில் உசிலம்பட்டி அருகே விநாயகர் சிலை திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி - புதுப்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கருவறையில் இருந்த சுமார் 3 அடி உயரமான விநாயகர் சிலையை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். காலையில் கோவிலுக்கு வந்த கிராம மக்கள் சிலை திருடு போய்யுள்ளதை கண்டு போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலைய போலீசார் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.