சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2022-09-12 22:42 GMT

சேலம் பெரமனூர் மேயர் நகர் பகுதியை சேர்ந்தவர் நடேசன். இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டீனாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி பாக்கியம் (வயது 69). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் ஒரு மகன் கோவையிலும், மற்றொரு மகன் வெளிநாட்டிலும் டாக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடேசன் இறந்து விட்டார். இதையடுத்து வீட்டின் கீழ் தளத்தில் பாக்கியம் வசித்து வருகிறார். மேல் தளத்தை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். இதற்கிடையில் கடந்த மாதம் 31-ந் தேதி பாக்கியம் கோவையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை அவருடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், பாக்கியத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை திருட்டு போனது தெரியவந்தது. முதலில் 50 பவுன் நகையும், வெள்ளி பொருட்களும் திருட்டு போனதாக தகவல் பரவியது. பின்னர் பாக்கியம் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு 8 பவுன் நகை மட்டும் திருட்டு போனதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் வீட்டுக்கு புகுந்து நகையை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்