டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு ரூ.2.69 லட்சம் திருட்டு

பாகலூர் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு ரூ.2 லட்சத்து 69 ஆயிரம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-02 17:17 GMT

ஓசூர்:

பாகலூர் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு ரூ.2 லட்சத்து 69 ஆயிரம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

டாஸ்மாக் கடை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள பட்டுவாரப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (வயது 45). இவர் முகுலப்பள்ளி கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 31-ந் தேதி இரவு இவரும், விற்பனையாளர் செல்வகுமரனும் விற்பனை முடிந்த பிறகு கடையை பூட்டி விட்டு வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மேற்பார்வையாளர் வெங்கடேசப்பா கடைக்கு வந்தார். அப்போது கடை பூட்டை திறந்து அவர் உள்ளே சென்றார். கடையின் பின்புறம் சுவரில் துளையிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையில் இருந்த பணப்பெட்டியை பார்த்தார்.

பணம் திருட்டு

அப்போது பணப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 750 திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து, வெங்கடேசப்பா பாகலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று சுவர் மற்றும் பணப்பெட்டியில் பதிவாகி இருந்த தடயங்களை ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்