சிகரெட் வாங்குவது போல் நடித்து பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு-வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெப்படை அருகே சிகரெட் வாங்குவது போல் நடித்து பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பள்ளிபாளையம்:
5 பவுன் பறிப்பு
வெப்படை அருகே உள்ள கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சித்ரா தேவி (வயது 45). இவர் நேற்று முன்தினம் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து, சித்ரா தேவியிடம் சிகரெட் கேட்டார்.
அவர் சிகரெட்டை எடுக்க முயன்றபோது, திடீரென அந்த வாலிபர் சித்ரா தேவி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் அங்கு தயாராக இருந்த மற்றொரு வாலிபருடன், மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.
வலைவீச்சு
இந்த சம்பவத்தை சற்றும் எதிர்பாராத சித்ரா தேவி, இதுகுறித்து வெப்படை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிய 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிகரெட் வாங்குவது போல் நடித்து பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.